Sunday, December 11, 2011

கொடுமை

அமாவசை நாளன்று 
எதிர் வீட்டு ஜன்னலில் 
எட்டிப்பார்த்த நிலவு 
வீட்டுக்காவலில்...

விலைஉயர்ந்த பொருட்களை 
விளம்பரத்தில் பார்த்து 
அடம் பிடித்து ஓய்ந்துபோன 
ஓலைவீட்டு குழந்தை..

குடல் கொண்ட உடல் 
கொண்ட பசிபோக்க 
கடல் சென்ற மீனவன் 
புயல் கொன்று பிணமாக...

பாவாடை தாவணியில் 
பார்த்த அழகெல்லாம் 
ஜன்னல் வைத்த ஜாக்கட்டில் 
செத்துப்போகும் கலாச்சாரம்..


கணுக்காலில் புண்ணோடு 
உச்சிவெயில் மண்மீது 
துட்டுக்கு கைநீட்டும் 
மழலை சிட்டு..

வாயிலே புகையோடும் 
கையிலே மதுவோடும் 
மாதுவை தேடிச்செல்லும் 
கட்டவிழ்த்த காளை..

எடுப்பான இடுப்பெல்லாம் 
குடத்தோடு உறவாடி 
அழியாத கண்டல்கள் 
மறைக்கும் முந்தானை..

மதத்தில் மதமும் 
ஜாதியில் வெறியும் கொண்டு 
காதலை நோகடித்து 
காதலரை சாகடிக்கும் 
மிருகங்கள் ...

நீதிக்கு சோதனை தரும் 
நீதிபதி சொன்ன தீர்ப்பில் 
வெட்கித்தலை குனியும் 
கண்கட்டிய நீதிதேவதை..

தமிழ் தந்த தலைவர்கள் 
சிலையிலும் தலைசீவி 
தலையற்ற முண்டங்கள் 
தாங்கிய நினைவிடங்கள்..

வாக்கு வேட்டையாடி 
மக்கள் சொத்தை சூறையாடி 
நட்டநடு வீதியில் உச்சி வெய்யிலில்
எரியும் கொடும்பாவி ..

குணம் கொண்ட மனிதரை 
பணம் கொண்டு பேரம்பேசும் 
பண பலம் கொண்ட 
பிணம் தின்னி கழுகுகள்..

இனவெறி அரசாங்கம் 
கொத்தோடு பறித்துச்சென்ற 
அழியா வடுக்களின் விம்பமாய் 
வெடி விழுந்து எரிந்த பனை 

இத்தனை கொடுமையிலும் 
பார்வையுள்ள குருடர்களாய் 
பேசத்தெரிந்த ஊமைகளாய் 
பெரிய கொடுமை நாங்கள்...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket