Friday, December 9, 2011

பள்ளிக்கூட நாட்கள்




வானம் வெளிக்கிறது ஆனால்
இமை மட்டும் திறக்க மறுக்கிறது
அன்னையவள் ஆரவாரிப்பில்
சண்டையிட்டு விழிக்கிறது


செயல் இழந்த கால்கள்
குளியலறை சேர்கின்றன
ஊக்க மருந்தாய் அம்மா தந்த
அன்புகலந்த கோப்பியினால் ..

எலும்பை மறைக்கும் தோலைப்போர்த்த
வெண்ணிறமாய் சிரிக்கிறது
அம்மாவின் கைரேகை அழித்த
அடிப்படைதேவைகளில் ஒன்று..


தூக்கம் தொலைத்து அருளிய
உணவினை வயிற்றினுள் ஒழித்து
காலை மலர்ந்த மொட்டாக
வீட்டை விட்டு வீதியில் ..


உப்புமூட்டை ஏற்றினாற்ப்போல்
முள்ளந்தண்டை கூன வைக்கிறது
தோளினில் தொங்கிக்கொண்டு
முதுகை கட்டிப்பிடிக்கும் சுமையொன்று

கண்டிக்கும் ஆசான் எல்லாம்
கலகலப்பாய் கூட்டமாக
பள்ளிகூடத்தில் நின்றுகொண்டு
பட்டணம் பற்றிய பேச்சில்..

தொழிநுட்ப வளர்ச்சிக்குட்படாத
துடைப்பம் சுமந்த பட்டாம்பூச்சிகள்
மலர்ந்த முகத்துடன் வாடி உதிர்ந்த
இலைகளை சுத்திகரிக்கும் தொழிலில்

மணி தந்த ஒலியினால்
கூட்டைத்தேடி பறக்கிறது
பிரிந்து நின்ற பட்டாம்பூச்சிகள்
சிறைப்பட்ட புத்தகத்திற்கு
விடுதலை கொடுக்க ...

சிற்றுண்டிச்சாலைக் கதவுகள்
ஏங்கும் இடைவேளை எப்போதேன
தற்காலிகமாய் தலைகள் முளைக்கும்
அவள் வருகைக்காய்..

சுற்றிவர படைகளுடன்
சுத்திவந்த உணவைபிரித்து
கொட்டிச்சிந்தி புசித்துவிட்டு
கட்டுக்கதைகள் கூறிடுவோம்..

விளையாட்டுப்பாடம் வந்தால்
வினைதேடி ஓடிடுவோம்
சிரிக்கின்ற காயங்களை
இங்கு மட்டுமே வாங்கிடுவோம்..

கண்களாலே கவிதை
எழுத கற்றுத்தரும்
ரோஜாப்பூக்கள் பூத்திருக்கும்
கதிரைகளில் சுற்றிவர..

நாற்புறமும் நண்பர்களும்
சிரித்துப்பேசும் இதயங்களும்
ஒன்றாக சங்கமிக்கும்
ஒரே இடம் வகுப்பறை..

அம்மாவின் கண்டிப்பும்
ஆசிரியரும் தண்டிப்பும்
சிந்தனையில் மறைந்து போகும்
நண்பர்களின் கலகலப்பில்..

சிந்தனைகளை கலைத்து
பள்ளிகூட மணி அடித்து
நண்பர்களை பிரிக்கிறது
பெற்றோருடன் சேர்ப்பதற்காய்

வையக வாழ்கையை
கற்றுத்தந்த ஆசான்கள்
குடியிருக்கும் கருவறைகள்
கொண்டிருக்கும் கட்டிடங்கள்
பாடசாலை..

கருவறையிருக்கும் இடம்
கோயிலென்றால்
எனக்கு எழுத்துயிர்தந்த
இதுவும் ஆலயம் தான்...



No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket