Monday, December 5, 2011

மனைவி

தாலியை வேலியாக்கி
தன்னையும் திரியாக்கி
ரணமான வாழ்வானாலும்
சிலுவைகளை சுமந்து கொண்டு
முழுமதியாய் ஒளி கொடுத்து
பிறையாக தேயும் நிலா...

வாழையடி வாழையாக
தலை முறைகள் தளைப்பதற்காய்
கருவிலே சிசுவையும்
மனதிலே பதியையும்
சுளிக்காமல் சுமக்கின்ற
வாழ்க்கை சுமைதாங்கி...


நெருப்பிலே சோறாக்கி
அடுப்பிலே தான் வெந்து
பசியாற பதி வரும் வரை
பானை முகம் தான் பார்த்து
வழிமீது விழிவைத்து
காத்திருக்கும் காவலன்..

பெத்த பிள்ளை அழும்போது
உண்டகளையில்உறங்கும் தலைவன்
கொண்ட உறக்கம் குழம்பாமல்
ரத்தத்தை பாலாக்கி
குழந்தைக்கு தான் ஊட்டி
இரவில் விழித்திருக்கும் சூரியன்..

பள்ளி சென்ற பிள்ளை வந்து
பலவித தொல்லை தந்தும்
தொல்லை தந்த பிள்ளை
உச்சிதனை தான் முகர்ந்து
இச்சு வைத்து ஊட்டிவிடும்
அன்பான தாய் மனைவி...

சொன்னதையும் செய்து விட்டு
சொல்லாததையும் செய்திடுவாள்
கட்டிய கணவனும் பெத்த பிள்ளையும்
சொத்தென தான் எண்ணி
கண்ணுள் சிறைவைத்து
இமைகளால் கதவடைப்பாள்...

கண்கண்ட தெய்வத்தை காப்பாத்த
நோன்பிருப்பாள் கண் காணா கடவுளிடம்  
ஒரு நாள் பிரிவிலும்
புழுவாய் துடித்திருப்பாள்
ஈடில்லா வாழ்கையிலே
ஈடிணையற்ற செல்வம் அவள்....

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket