Sunday, December 4, 2011

மழையே..

வான் நின்று மேகம் வழங்கும்
துளிகளாக நதியை சேரும்
நதியெல்லாம் ஒன்று கூடி
வற்றாத கடலை நாடும்
கடலிலே அலையாகும்
மீன்களின் உறவாகும் மழையே ..

மண்ணிலே நீ விழுந்தால்
சிரித்திடுமே மரங்களெல்லாம்
மரத்திலுள்ள பூக்களெல்லாம்
மகரந்த சேர்க்கை செய்திடுமே
மண்ணிற்குள் மழை அடங்கி
கிணற்று வாளியில் வெளிவருமே..


உன் வருகையை எதிர்பார்த்து
கப்பலாகும் காகிதங்கள் ..
செப்பனிட்ட வீதிகளை
சுத்தமாக கழுவிடுவாய்
இலைகளிலே தங்கிவிட்டு
கிளை அசைந்தால் எமை நனைப்பாய்

காதலர்கள் கூடுகையில்
உன் வரவு நல்வரவு ..
கேட்காமல் தீண்டி விட்டு
ஸ்பரிசங்களை தூண்டிடுவாய்
எல்லைகளை தூக்கிலிட்டு
கொள்ளை இன்பம்தான் கொடுப்பாய்...

தீண்டிவிட்டு சென்ற பின்னே
காய்ச்சல் வந்து கவர்ந்திடுமே
பள்ளங்களில் உன்னிடுகை
கால்களிலே கடிநீற்சிரங்கு
தலைகளிலே உன் விழுகை
தடிமனோடு குழந்தை அழுகை..

அளவோடு நீ பெய்தால்
பூப்பூக்கும் கதிரெல்லாம்
அலுக்காமல் நீ பெய்தால்
புரண்டோடும் கரை எல்லாம்
அடைமழையாய் வரும் போது
அலங்கோலம் உன் வருகை...

சினங்கொண்டு மழை பெய்தால்
சிந்தனையும் செத்து விடும்
சீராக மழை பெய்தால்
கற்பனையில் கவிதை வரும்
புயலோடு சேர்ந்து வந்து
நற்பெயரை கெடுக்காதே...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket