Saturday, May 12, 2012

மகனின் மடல்....




பல காலம் தவமிருந்து
பத்து மாசம் காத்திருந்து
பக்குவமாய் பெற்ற மகன்
பாசத்துடன் வரைகின்றேன்..

காகிதத்தில் நான் வரையும்
காரணங்கள் ஒன்றிரண்டு
காலமெல்லாம் நீ பட்ட
கொடுந்துயரம் ஆயிரங்கள்..

உன்பெருமை எடுத்தியம்ப
என் திறமை போதாதம்மா
இருந்தாலும் ஒன்றிரண்டு
நான் சொல்வேன் கேட்டிடம்மா..

பட்டினியை உணவாக்கி
தாய்பாலை எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து
கண்மணிபோல் எனை காத்தாய்..

Saturday, March 31, 2012

வரம் வேண்டும்..

இசைமீட்டும் குயிலோடு 
தலையாட்டும் மரமெல்லாம் 
தருவிக்கும் இளங்காற்றில் 
தன்மான தமிழ் வேண்டும் 

பாடுபட்டுப்பெற்றுடுத்து 
பசிநீக்க பாலூட்டி 
துயில் துறந்து உயிர் காத்த தாயை 
நீங்காத நிலை வேண்டும் ..

மனதுக்கு இதமான 
மகிழ்ச்சிக்கு உரமூட்டும் 
பேரின்பம் தரவல்ல 
மழலை மொழி வேண்டும்..

காவியங்கள் தலைகுனியும் 
கவிதைகள் வரைவதற்கு 
நினைவுகளின் இருப்பிடமாய் 
காதலிக்கும் நெஞ்சம் வேண்டும்

Wednesday, January 25, 2012

ஒரு காதல் கதை (கவிதை)

காற்றலையில் மிதந்து கொண்டு 
காதலியின் வீடுநோக்கி 
தூது போகும் அழகான வெண்புறா 
தொலைக்காட்சி திரையினிலே.. 

தூது போன வெண்புறாவோ 
காதினிக்க சேதிசொல்ல 
தூது கேட்ட காதலியோ 
கனவுலகம் எட்டிப்பார்த்தாள்..

அங்காடித் தெருவினிலே 
அழகான உருவினிலே 
பணிவிலே திமிர்காட்டும் 
பார்வையொன்று வீசியதே..

மான்விழி கெண்டையாள் 
மெல்ல நிமிர்ந்து உற்று நோக்க 
கண்களுக்கு விருந்தாகும் 
விம்பமொன்று கண்ணில் கண்டாள்

ஆயிரத்தில் ஒருவனென்று 
அடிமனது அறைகூவ 
அடியவளோ அசைவின்றி 
அவன் விழியில் கலந்து விட்டாள்..

Sunday, January 22, 2012

கவிதைக்கு கவிதை

ஆதியும் அந்தமும் இல்லா 
அரும்பெரும் சோதியும்
ஒரு கணம் செவிசாய்க்கும் 
பேனை முழங்கும் வரி கேட்க..

காகித குப்பைகளில் 
வீற்றிருக்கும் முத்து 
காதலர் மனங்களை 
கட்டித்தழுவும் சொத்து 

இயற்கையும் செயற்கையும் 
உறவாடி இழையோடும் 
உவமானம் உவமேயம் 
குறைவின்றி வழிந்தோடும் 

நிலவுக்கே அழகூட்டும் 
 ஒப்பனைக்கருவி 
காகிதத்தில் விளையும் 
கருகாத பயிர் ...

Tuesday, January 10, 2012

என்னவளே...

காதல் தந்த கன்னிப்பெண்ணே 
காண ஏங்கும் எந்தன் கண்ணே 
காலை மாலை வாசல் முன்னே 
காத்திருப்பேன் வாடி வெளியே..

தினசரி வருகின்ற தினத்தந்தி போல் வந்து 
என் கைகள் சேர்ந்து விடு 
தினத்தந்தி தாங்கிய கவிதையின் உவமையில் 
உன் கண்கள் காட்டி விடு.

ஏனோ என்னுள்ளே நூறு காட்சிகள் 
நூறும் நீ தானடி 
காதல் எனக்கிங்கு கண்ணா மூச்சியா 
கைகள் அலைகின்றதே..

மனக்கண்ணில் நான் காணும் கனவினில் 
நீ வந்தால் மணிகூட சிறுதுளியே 
சிறுதுளி பெருவெள்ளம் போல் வந்து 
நனைத்தாலும் கண்ணிமை நான் திறவேன்..

Saturday, December 31, 2011

புத்தாண்டே...

வருடம் ஒருமுறை 
பிறக்கும் பிறப்பே 
உன்னை வரவேற்க 
உலகமே தயார் நிலையில்..

கதிரவனின் ஒளிவாங்கி
கதிரெல்லாம் ஒளியேற்றி 
உழவன் வாழ்வில் மெருகேறும் 
சிறப்பாண்டாய் நீ வருக 

கருமுகில் படையெடுத்து 
அடாதமழை விடாது பெய்து 
தொற்று நோய் உருவெடுக்கும் 
காலனாய் நீ வேண்டாம் 

நாற்புறமும் சுற்றங்கள் 
நண்பர்கள் உறவினர்கள் 
பாசமழை பொழியும் 
நல்லாண்டாய் நீ வருக..
PhotobucketPhotobucket
Photobucket